* 2.53 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்
* சீறி பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி
நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே கோரையாறு தலைப்பு (மூணாறு தலைப்பு ) அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 2.53 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்பதால் சீறி பாயும் தண்ணீரை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.டெல்டா மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையை காரணமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது .இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பிறகு பருவமழை பொய்த்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் இருந்த நிலையில் விவசாயிகள் ஓரளவு சம்பா மற்றும், சாகுபடி பணியை செய்து முடித்தனர்.
இந்நிலையில் இந்தா ண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவாகவே இருந்தது. அதன் பிறகு தென்மேற்கு பருவமழை அதிக அளவு பெய்ததால் கர்நாடக அணைகள் நிரம்பியது. கர்நாடகா அணைகளில் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது.மேட்டூர் அணையில் சுமார் 2 லட்சம் கன அடி வரை வரத்து வந்தது. இங்கு திறந்த தண்ணீர் வந்து கடந்த 31ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது .அதில் வெண்ணாற்றில் திறக்கப்பட்ட நீர் மிகவும் குறைவாக இருந்தது. இதற்கான காரணம் ஆறுகளில் பாலங்கள் கட்டும் பணி என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு நீடாமங்கலம் அருகே உள்ள கோரையாறு தலைப்பு ( மூணாறு தலைப்பு )க்கு இரவு 8 மணி அளவில் மேட்டூர் தண்ணீர் வந்தது 8.30 மணி அளவில் அங்குள்ள பணியாளர்கள் கோரையாறு, பாமணி ஆறு ,சிறிய வெண்ணாறு பகுதிகளில் அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டனர். தண்ணீர் திறந்து சாகுபடிக்கு சீறி சென்றது. இந்நிலையில் பாமணி ஆற்றில் 38,357 ஏக்கரிலும், கோரையாற்றில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கரிலும், வெண்ணாற்றில் 94 ஆயிரத்து 219 ஏக்கர் உள்ளிட்ட 2 லட்சத்து 53 ஆயிரத்து 533 ஏக்கரில் விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று பாசன வசதியை அளிக்க உள்ளது.
கோரையாறு தலைப்பில் (மூணாறு)நீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.தற்போது நிலவரப்படி கல்லணையிலிருந்து வெண்ணாற்றில் 3,511கன அடி நீர் வருகிறது. அதில் பாமனியாற்றில் 522கனஅடியும், கோரையாற்றில் 1,727 கன அடியும், வெண்ணாற்றில் 1,262 கன அடியும் திறக்கப்பட்டு விவசாயத்திற்கு தண்ணீர் செல்கிறது. இந்த நீர் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.