திருப்புவனம் : கீழடி அருகே கொந்தகை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை காட்சிப்படுத்தும் பணிகளை தொல்லியல் துறையினர் தொடங்கியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடி 8ம் கட்ட அகழாய்வின் ஒரு பகுதியாக கொந்தகையில் கடந்தாண்டு பிப்.13ம் தேதி துவங்கி செப்டம்பர் வரை நடந்தது. இந்த அகழாய்வில் 57 தாழிகள் கண்டறியப்பட்டன. கொந்தகை அகழாய்வில் மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. எட்டாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட 57 தாழிகளில் உள்ள பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எட்டாம் கட்ட அகழாய்வில் முதன் முறையாக தாழிகளில் நெல் மணிகள் கண்டறியப்பட்டன.
எட்டாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தாழிகளை காட்சிப்படுத்த வசதியாக தாழிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தொல்லியல் துறையினர் சுத்தம் செய்து வருகின்றனர். ஏற்கனவே கொந்தகையில் 8ம் கட்ட அகழாய்வு தளம் ஷெட் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தாழிகளை சுத்தம் செய்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பின்னர் திறந்தவெளி கண்காட்சி அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.