சிறுவாணி நீரின் தனித்துவத்தை போலவே கொங்கு மண்டல சாப்பாட்டிற்கும் சிறப்பு உண்டு. கொங்குப் பகுதியில் கிடைக்கிற உணவுகள் அனைத்துமே ருசியிலும், செய்முறையிலும் தனித்தன்மை வாய்ந்தவை. கொள்ளு, பச்சைப்பயறு, கீரை கரைசல், அரிசிப் பருப்பு சாதம் என அந்தப் பகுதிக்கே உண்டான சைவ சாப்பாட்டை போலவே அசைவத்திற்கும் தனித்துவம் இருக்கிறது. அப்படிப்பட்ட சாப்பாட்டையும் சுவையையும் சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறது ‘கோவை நறுவி’ எனும் உணவகம். சென்னை, அண்ணா நகரில் உள்ள இந்த உணவகம் தற்போது உணவுப் பிரியர்களின் லேண்ட்மார்க்காக மாறியுள்ளது. புதிதான சுவையில் அதுவும் கோவை ஸ்டைல் உணவுகளை சாப்பிட வேண்டுமென்றால் இந்த உணவகம் நல்ல சாய்ஸ்.
உணவகத்திற்கு கோவை நறுவி எனப் பெயர் வைத்திருக்கிறீர்களே? நறுவி என்றால் என்ன எனக் கேட்டதும், சிரித்துக்கொண்டே பேசத் தொடங்குகிறார்கள் அனில்குமார், ஐஸ்வர்யா தம்பதியினர்.‘‘நறுவி என்றால் நறுமணம் என்று பொருள். கோவையில் கிடைக்கும் உணவுகளை அதே சுவையில் அதே நறுமணத்தில் கொடுத்து வருவதால் எங்கள் உணவகத்திற்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறோம்’’ என்கிறார் அனில்குமார்.
‘‘சொந்த ஊர் கோவைதான். சிறுவயதில் இருந்தே எங்கள் ஊர் உணவுகள்தான் அதிகமாக சாப்பிட்டு இருக்கிறேன். கல்லூரிப் படிப்புக்காக வெளியூர் சென்ற போது எங்க ஊர் உணவுகள் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டேன். அந்தளவிற்கு எங்கள் பகுதியில் கிடைக்கும் உணவுகள் மீது எனக்கு அதிக விருப்பம். சென்னைக்கு வந்த பிறகு கொங்கு உணவினை சாப்பிடுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போனது. சென்னையைப் பொறுத்தவரை பாசுமதியில் தயாராகிற பிரியாணியும், தென் மாவட்ட உணவுகளும்தான் அதிகம். இந்த உணவுகள் சுவையாக இருந்தாலும், கொங்கு உணவினை சாப்பிட்ட திருப்தி கிடைக்கவில்லை. எங்களைப் போல கோவை மற்றும் கொங்கு ஸ்டைல் உணவுகள் சாப்பிட விரும்புபவர்களுக்காகவே தொடங்கப்பட்டதுதான் இந்த உணவகம்.
இந்த உணவகத்தை நாங்களும் எனது சகோதரி திவ்யா அவரது கணவர் மகேந்திர ராம் அனைவரும் சேர்ந்துதான் நடத்தி வருகிறோம். உணவுத் தொழிலில் எங்களுக்கு அனுபவம் கிடையாது என்றாலும், நாங்க சிறுவயதில் இருக்கும் போது எனது அம்மா ஒரு ஹாஸ்டலுக்காக சமைத்து கொடுத்து வந்தார். அவருக்கு துணையாக நான் போவது வழக்கம். ஒரு உணவை சமைப்பதில் இருந்து அதை எப்படி நல்ல முறையில் பரிமாற வேண்டும் என அனைத்துமே அம்மா நடத்தி வந்த கேண்டீன் மூலம் தெரிந்து கொண்டேன். அந்த அனுபவத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு நாங்கள் இந்த உணவகத்தை தொடங்கினோம்’’ என்கிறார் அனில்குமார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா, ‘‘கொங்கு உணவுகளில் மஞ்சள், தேங்காய், வர மிளகாய், சின்ன வெங்காயம்தான் அதிகமாக சேர்க்கப்படும். சில உணவுகளை தேங்காய் எண்ணெயில் சமைப்போம். அளவான காரத்தில் கூடுதலாக தேங்காய் சேர்த்து சமைக்கப்படும் உணவுகள்தான் கோவை உணவு. அதைத்தான் அப்படியே சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறோம். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் காரமான உணவைச் சாப்பிட்டு பழகியவர்கள். காரமாக சாப்பிடும் போது உணவின் உண்மையான சுவை தெரியாது. அதனால், எங்களின் உணவகத்தில் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். பாரம்பரியமான சுவையை எந்தவித சுவையூட்டிகளும் சேர்க்காமல் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறோம்.
உணவகம் தொடங்க வேண்டும் என முடிவெடுத்தப் பிறகு அதை எவ்வளவு சரியாக செய்ய வேண்டும் என ஒவ்வொன்றையும் யோசித்து முடிக்கவே எங்களுக்கு ஒரு வருடம் ஆனது. எங்கு சரியான மளிகைப் பொருட்கள், இறைச்சி கிடைக்கும் என அனைத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டு, அங்கிருந்துதான் சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறோம். அடுத்து கோவை ஸ்டைல் உணவுகளை நாங்கள் நினைத்த மாதிரியே சமைக்க மாஸ்டர்களை தேடிப் பிடித்தோம்.
உணவகத்தில் கொடுக்க நினைத்த உணவுகளை உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பரிமாறினோம். அவர்கள் நிறை குறைகளைச் சொல்ல, அதை சரி செய்து மீண்டும் பரிமாறினோம். அவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்ன பிறகேதான் அதனை உணவகத்தின் மெனுவில் சேர்த்தோம். உணவைப் பொறுத்தவரை ஒவ்வொன்றையும் கவனமாக பார்த்து பார்த்து செய்தோம். இங்கு சைவம், அசைவம் இரண்டுமே உண்டு.
மீல்ஸ், பிரியாணி, ஸ்டார்டர்ஸ், கிரேவி வகைகள், சூப், ஜூஸ், டெசர்ட்ஸ் என அனைத்தும் இருக்கிறது. பிரியாணி சீரக சம்பா அரிசியில் கொடுக்கிறோம். அதேபோல சைவ மீல்சில், இரண்டு வகையான சைவ குழம்பு, இரண்டு வகையான கூட்டுப் பொரியல், அப்பளம், ரசம். அசைவத்தில் 3 வகையான குழம்புடன் சிக்கன் 65 மற்றும் கூட்டுப் பொரியல், அப்பளம், ரசம். தினமும் ஒவ்வொரு விதமான ஸ்வீட்டும் உண்டு. சிக்கன், மட்டனில் கொங்கு ஸ்டைல் ஸ்டார்டர்ஸ் இருக்கிறது.
சிக்கன் காட்டு வறுவல், மின்ட் சிக்கன், மகாராணி சிக்கன் என சிக்கனில் 10 வெரைட்டி இருக்கிறது. அதேபோல, மட்டனில் சாப்ஸ், மட்டன் பெப்பர் ஃப்ரை, மொறுமொறு மட்டன் ஃப்ரை என மட்டனில் 6 வெரைட்டி இருக்கிறது. முட்டை, கிரேவி, கடல் உணவுகள் மற்றும் சைவம் போன்றவற்றிலும் பல வெரைட்டிகளை வழங்குகிறோம்.
இரவு உணவாக தோசை, பரோட்டாவில் 20க்கும் மேலான வெரைட்டி இருக்கிறது. இடியாப்பம், கொங்கு ஸ்டைல் சந்தகையும் கிடைக்கும். என்னதான் கோவை ஸ்டைல் உணவாக இருந்தாலும் அனைவரும் விரும்பும் சுவையைத்தான் எங்கள் உணவகம் கொடுத்து வருகிறது’’ என மகிழ்வோடு பேசி முடித்தனர்.
கொம்புச்சா
கொம்புச்சா பற்றி பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. சாப்பிட்டு முடித்தவுடன் சிலர் ஜீரணத்திற்காக ஐஸ்கிரீமோ, ஜூஸோ அல்லது தேநீரோ குடிப்பார்கள். அப்படி குடிப்பவர்களுக்காகவே கொண்டுவரப்பட்டதுதான் இந்த கொம்புச்சா. இது புளிப்புத்தன்மை உள்ள தேநீர் வகைதான். சூடாகவும், ஜில்லென்றும் குடிக்கலாம். செரிமான சக்தியை ஏற்படுத்தும் இந்த கொம்புச்சா, உடலுக்குத் தேவையான நல்ல நுண்ணுயிர்களை நமக்கு கொடுக்கிறது. இப்படிப்பட்ட கொம்புச்சா நமது உணவகத்திலும் கிடைக்கிறது. இதனை திருவள்ளூரில் இருந்து வாடிக்கையாளர்களுக்காக விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
தொகுப்பு: ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்