Thursday, April 25, 2024
Home » காங். ஆட்சிக்கு வந்தால் 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பு நீக்கப்படும்: ராகுல் வாக்குறுதி

காங். ஆட்சிக்கு வந்தால் 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பு நீக்கப்படும்: ராகுல் வாக்குறுதி

by Ranjith

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதோடு, இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும் என்று முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில்,‘‘யார் ஏழை என்று நாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா? எத்தனை பேர் இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்?

இதையெல்லாம் கணக்கிட்டு பார்ப்பது அவசியமில்லையா? பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 88 சதவீத ஏழைகள், தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. பீகாரில் இருந்து வரும் புள்ளி விவரங்கள் நாட்டின் உண்மையான தன்மையின் ஒரு சிறு பகுதி மட்டுமே. ஏழை மக்கள் எந்த நிலையில் வாழ்கிறார்கள் என்பது குறித்த எந்த ஒரு மதிப்பீடும் நம்மிடம் இல்லை.

எனவே நான் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார வரைபடம் ஆகிய இரண்டு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகளை எடுக்க போகிறோம். அதன் அடிப்படையில் 50 சதவீத இட ஒதுக்கீடு வரம்பு நீக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி நேற்று 3ம் நாளாக குஜராத்தில் யாத்திரை மேற்கொண்டார். நர்மதா மாவட்டத்தில் நடந்த நீதி யாத்திரையின்போது ராகுல்காந்தி பல்வேறு சமுதாய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

கன்வாராபாரா இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலித், பழங்குடியினர், விவசாய அமைப்புக்ககளை சேர்ந்த சுமார் 70 தலைவர்களுடன் ராகுல் உரையாடி அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்தார். சில பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அதிக இடப்பெயர்வுகளை எதிர்கொள்வதையும், போதிய இழப்பீடு இன்றி கடும் சிரமத்திற்குள்ளாவதாகவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ‘‘சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒரு புரட்சிகர நடவடிக்கை என்பதை மறக்காதீர்கள். இது உங்களுக்கான வழியை திறக்கும். இந்தியாவின் செல்வம் மற்றும் அதன் நிறுவனங்களில் ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்பதை உறுதி செய்வதே எனது நோக்கமாகும்” என்றார்.

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi