போபால்: மத்தியப்பிரதேசத்தின் பழங்குடியினருக்கான மாணாவர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மருத்துவரும் பாஜக சார்பில் பொறியாளரும் களமிறக்கப்பட்டுள்ளது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகின்றன. அங்கு ஆளும் பா.ஜனதாவுக்கும், எதிர்கட்சியான காங்கிரசுக்கும் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. மத்தியப்பிரதேசத்தின் மாணாவர் தொகுதியில் 60% பழங்குடியின வாக்காளர்களை கொண்ட தொகுதி ஆகும்.
இங்கு 2018 சட்டமன்ற தேர்தலின் போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பேராசிரியர் ஹிராலால் அலவா பணியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பாஜக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ரஞ்சனா பாகேலை விட சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் மருத்துவர் ஹிராலாலுக்கு எதிராக சிவராம் கண்ணுஜ் (Shivram Kannauj) பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் அலவாவுக்கு கைகொடுக்கும் என்ற நிலையில் பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ரஞ்சனா பாகில் போட்டி வேட்பாளராக களமிறக்க கூடும் என்பது சிவராம் தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.