காஞ்சிபுரம்: கோனேரிகுப்பம் ஊராட்சியில் ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியினை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரிக்குப்பம் கிராம ஊராட்சியில் உள்ள செல்வ விநாயகர் நகர், புது நகர், தலையாரி தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகத்தில் அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு மின் விளக்குகள் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை பழுதடைந்து அதிக பொருட்செலவு ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், மின்சார ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசனிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பரிந்துரை செய்தார். அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.6 லட்சம் செலவில் 100 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி செல்வ விநாயகர் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார் தலைமை தாங்கினார். இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் குமார், கோனேரிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சைலஜா சேகர், ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத், தமிழ்நாடு மின்சார வாரியம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் பாண்டியன், உதவி செயற்பொறியாளர் ஹரிதாஸ், உதவி பொறியாளர் கமலக்கண்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.