மூணாறு: கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சக்கை கொம்பன் யானை வழிமறித்து நின்றதால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ேகரள மாநிலம், மூணாறை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. விளைநிலங்கள், குடியிருப்புகள் மற்றும் மனிதர்களையும் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் மக்களின் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. சாந்தன்பாறை, சின்னக்கானல், மூணாறு, தேவிகுளம் ஆகிய பஞ்சாயத்துகளில் சுற்றித்திரியும் காட்டு கொம்பன் யானைகள் தான் அதிக தாக்குதல் குணம் உடையவை. படையப்பா, அரிசிக்கொம்பன், கணேசன், முறிவாலன், ஓஸ் கொம்பன் என்ற பெயர்களில் இந்த காட்டு கொம்பன் யானைகள் அழைக்கப்படுகின்றன.
மூணாறு அருகே சின்னக்கானல் ஊராட்சிக்கு உட்பட்ட யானையிறங்கல் பகுதியில் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இறங்கிய சக்கை கொம்பன் யானை வாகனங்களை வழிமறித்து சாலையின் நடுவே நின்றது. இதை தொடர்ந்து அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். மேலும் சாலையோரம் இருந்த வியாபாரி ஒருவரின் கடையையும் யானை அடித்து நொறுக்கியது. தகவலறிந்த வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்டியதையடுத்து, அவ்வழியாக போக்குவரத்து சீரானது.