சேந்தமங்கலம் : கொல்லிமலையில், மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்திருந்தனர்.
மழையின் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, சினி பால்ஸ், சந்தனபாறை அருவி, மாசிலா அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு தாவரவியல் பூங்கா,சிக்குப்பாறை காட்சி முனையம், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கண்டு ரசித்தனர்.
மாசிலா அருவியில் வனத்துறையின் மூலம் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த பயணிகள் மாலை வீடு திரும்பும் பொழுது சோளக்காடு, தெம்பலம், திண்டு பகுதிகளில் உள்ள பழச் சந்தையில் அங்கு விளையும் அன்னாசி, கொய்யா, மலை வாழைப்பழம், பலா, மிளகு உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.