நாமக்கல்: கொல்லிமலை வனப்பகுதியில் 9 கிமீ தூரம் நடந்து சென்று, மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார், கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சாராய வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்தார். நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க, மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதை அடியோடு ஒழிக்க, மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைலமையில் மதுவிலக்கு போலீசார் மாதந்தோறும் கொல்லிமலை மற்றும் போதமலை பகுதிகளுக்கு, வனப்பகுதி வழியாக நடந்து சென்று, அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் தலைமையில் ஏடிஎஸ்பி தனராசு, மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார், புளியஞ்சாலையில் இருந்து வனப்பகுதி வழியாக 9 கிமீ தூரம் நடந்தே சென்று சாராய வேட்டையில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் பல இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையை தொடர்ந்து, மலை கிராமங்களான ஆலவாடி, லாந்தூர், ஓலவாடி ஆகிய பகுதிகளுக்கு எஸ்பி நேரில் சென்று, அங்குள்ள மனம் திருந்திய சாராய குற்றவாளிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது அவர்களின் மறுவாழ்வுக்கு, அரசு ஒதுக்கியுள்ள நிதி குறித்து விளக்கினார். மேலும், அவர்கள் தற்போது என்ன தொழில் செய்து வருகிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்தார். சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் சட்டப்படி குற்றம், அதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. மலை கிராமங்களில் யாராவது சாராயம் காய்ச்சினால், அதுபற்றி உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என எஸ்பி., அங்குள்ள பொதுமக்களை கேட்டுகொண்டார்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில், சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மனம் திருந்தியவர்கள், விவசாயம் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் மறுவாழ்வுக்கு அரசுக்கு பரிந்துரை செய்து, நிதிஉதவி கிடைக்க மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. மலை கிராமங்களில் தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலை தொடரவேண்டும் என்பதற்காக, தொடர் சோதனையில் மதுவிலக்கு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் எந்த பகுதியில் சாராயம் விற்பனை நடந்தாலும், அவர்கள் பற்றி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். தகவல் அளிப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.