சேந்தமங்கலம்: கொல்லிமலையில் சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. கொல்லிமலை வனத்துறையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது.
வனச்சரகர் சுகுமார் தலைமையில் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் வீசிச்சென்ற குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் பேப்பர்கள், காலி தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றினர். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் படிக்கட்டுகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பைகளை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். உணவு பண்டங்களை துணிப்பைகளில் கொண்டு வர வேண்டும்.
காலி தண்ணீர் பாட்டில் குளிர்பான பாட்டில்களை சுற்றுலாத்தலங்களில் வைக்கப்பட்டுள்ள, இரும்பு குப்பை கூண்டுகளில் போட வேண்டும் உள்ளிட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். நிகழ்ச்சியில் வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள், வன பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.