திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விழிஞ்ஞத்தில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு கொச்சிக்கு லைபீரிய நாட்டில் பதிவு செய்யப்பட்ட எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் புறப்பட்டு சென்றது. இதில் 600க்கும் மேற்பட்ட சரக்கு கண்டெய்னர்கள் இருந்தன. இவற்றில் 25 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு உள்பட ஆபத்தான அமிலப் பொருட்கள் உள்ளன. இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன் இந்தக் கப்பல் திடீரென மூழ்கத் தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொச்சியில் இருந்து கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படையினர் மீட்புக் கப்பல் மற்றும் விமானத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக கப்பலில் இருந்த 24 ஊழியர்களையும் மீட்டனர். நேற்று காலை இந்த சரக்கு கப்பல் முழுவதுமாக மூழ்கியது. இதில் இருந்த அமிலப் பொருட்கள் அடங்கிய கண்டெய்னர்கள் உள்பட அனைத்து கண்டெய்னர்களும் கடலில் விழுந்தன. இந்தநிலையில் நேற்று அதிகாலை சில கண்டெய்னர்கள் கொல்லம், ஆலப்புழா கடற்கரையில் ஒதுங்கின. கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி அருகே உள்ள செறிய அழிக்கல் மற்றும் நீண்டகரை பகுதியிலும், ஆலப்புழா மாவட்டம் வலியஅழிக்கல் பகுதியிலும் இந்த கண்டெய்னர்கள் ஒதுங்கின. இந்தப் பகுதியில் 27 கண்டெய்னர்கள் ஒதுங்கி உள்ளன.
கரை ஒதுங்கிய கண்டெய்னர்கள் பெரும்பாலும் திறந்த நிலையில் காணப்பட்டன. சில கண்டெய்னர்களில் சீன நாட்டு கீரின் டீ மற்றும் பஞ்சு ஆகியவை இருந்தன. கண்டெய்னர்கள் ஒதுங்கிய பகுதியிலிருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். கப்பல் கவிழ்ந்த பகுதியிலும், கண்டெய்னர்கள் ஒதுங்கிய பகுதிகளிலும் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.