புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களை வாபஸ் பெற்று டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண் மருத்துவர் கொலை தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ மற்றும் மாநில காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மருத்துவ சங்கங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதில் இருந்து மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் மருத்துவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாக தரப்பில் இருந்து மருத்துவர்களுக்கு குண்டர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்றம் ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “மருத்துவர்களின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க ஏற்கனவே அமைக்கப்பட்ட பணிக்குழு நடவடிக்கை எடுக்கும். இருப்பினும் போராட்டம் நடத்தாமல் மருத்துவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு செல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது. பல மருத்துவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் 36 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வேலை வாங்கப்படுகின்றனர். இது மிகவும் கவலை அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அமைத்துள்ள குழு மருத்துவரின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 8 – 9 ஆகிய இரவில்தான் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டு உள்ளார்.
ஆனால் நடந்த விவரங்கள் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி காலை 10.10 மணிக்குதான் காவல்துறைக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வளவு நீண்ட நேரம் காவல்துறைக்கு விஷயத்தை சொல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது. மேலும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மாலை 6.10 மணிக்குதான் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அதாவது அப்போது பெண் மருத்துவர் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்தார் என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் இந்த விவரத்தை 11:30 மணி வரை காவல்துறைக்கு அனுப்பப்படாமல் இருந்திருக்கிறது. இவையெல்லாம் நிச்சயம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் கொல்கத்தா காவல்துறை கையாண்ட விதம் கிரிமினல் நடைமுறை சட்டங்களுக்கு எதிராக இருக்கிறது.
இது உச்ச நீதிமன்றத்திற்கே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கை எங்கே? இதில் முழுவதுமாக எதுவுமே இல்லை. மரணத்திற்கான காரணங்கள் இருவேறு விதமாக கூறப்பட்டுள்ளது. எதை நாங்கள் உண்மையானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் தற்கொலை என்றும், பிறகு இயற்கைக்கு மாறான மரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இரண்டையும் எப்படி சமரசம் செய்ய முடியும். அது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தயவு செய்து பொறுப்பான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள். இதுபோன்ற அரைகுறையான வேலையை செய்யாதீர்கள். குறிப்பாக இந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனையில் தாமதம் செய்தது, குறிப்பிட்ட நேரத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை என்பது உள்பட அனைத்து தவறுகளும் மிகவும் தெளிவாக தற்போது தெரிகிறது” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். இந்த உத்தரவுக்கு பிறகு பணிக்குத் திரும்பும் மருத்துவர்கள் மீது எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாது. இதுகுறித்து எங்களிடம்உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையும், மருத்துவத்துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாது. இதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் இக்கட்டான நிலைமையை அரசியல் ஆக்காதீர்கள். சட்டம் அதன் போக்கை எடுக்கும். நாங்கள் மருத்துவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அக்கறை கொண்டுள்ளோம். நாங்கள் நடைமுறைப்படுத்தக்கூடிய வழிகாட்டுதல்களை அனுப்புவோம்.
அதையடுத்து அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மருத்துவர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர், மாநிலகளின் தலைமை செயலாளர்கள் மற்றும் மாநிலகளின் காவல்துறை இயக்குனர்கள் ஆகியோர் தரப்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதுகுறித்த நடவடிக்கைகளை அடுத்து இரண்டு வாரத்திற்குள் எடுக்க வேண்டும்’ என்ற நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் கொல்கத்தா பெண் மருத்துவர் விவாகரத்தில் நீதி கேட்டு மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது.
இதுகுறித்து அகில இந்திய மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வௌியிட்ட அறிக்கையில், “மருத்துவர்களின் கோரிக்கைகள் மற்றும் வேதனைகள் பற்றி உச்ச நீதிமன்றம் கருத்தில் எடுத்து கொண்டதை நாங்கள் வரவேற்கிறோம். மருத்துவர்களின் பிரச்னைகளை சரி செய்ய தேசிய பணிக்குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இதை நாங்கள் பாராட்டுகிறோம். வரவேற்கிறோம். போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியதும் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கம் வௌியிட்ட அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தின் தலையீடு மற்றும் மருத்துவர்களின் கோரிக்கைகளை தீர்ப்பதில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாளை(இன்று) காலை 8 மணி முதல் அனைவரும் பணிக்கு திரும்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சந்தீப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை
இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 டாக்டர்களை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ தரப்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதி கிடைத்ததும், இவர்கள் 5 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும்.