கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்காத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி சஞ்சய் ராயிடம் நேற்று முன்தினம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக, வழக்கில் சந்தேகிக்கப்படும் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 6 பேரிடம் சனிக்கிழமை உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் துணை முதல்வர் சஞ்சய் வசிஸ்ட் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் 2வது முறையாக நேற்று மீண்டும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி உள்ளனர்.
கடந்த 10 நாட்களில் சந்தீப் கோஷிடம் சிபிஐ பல மணி நேர விசாரணை நடத்தியது. அதில் அவர் பல கேள்விகளுக்கு பதிலளிக்காததால் 2வது முறையாக உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, சந்தீப் கோஷ் மீதான மருத்துவமனைமுறைகேடு தொடர்பான வழக்கிலும் சிபிஐ தனது விசாரணையை தீவிரமாக்கி உள்ளது. சந்தீப் கோஷ், வசிஸ்ட் ஆகியோருக்கு சொந்தமான 13 இடங்களில் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த முக்கிய பல ஆவணங்களை கைப்பற்றினர். மருத்துவமனையில் பல்வேறு பணிகளுக்காக முறைகேடாக சில நிறுவனங்களுக்கு டெண்டர் தரப்பட்டதும் உறுதியானதால் சந்தீப் கோஷ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.