கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். அதேநேரம் பயிற்சி மருத்துவரின் பிரேத பரிசோதனையை அவசர அவசரமாக முடித்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், அதன் பின்னணியில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷூக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால், அவரை பற்றிய ரகசியங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து சந்தீப் கோஷூக்கு நெருக்கமானவராக கருதப்படும் டெபாஷிஷ் கூறுகையில், ‘சம்பவத்திற்கு பிறகு, சந்தீப் கோஷ் தனது தொலைபேசியில் இருந்து நான்கு பேரிடம் பேசினார்’ என்றார். இதுதொடர்பான ஆடியோ விபரங்கள் வெளியாகி உள்ளன. கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு பிரேத பரிசோதனை செய்த குழுவில் இடம்பெற்ற டாக்டர் ரீனா தாஸ் கூறுகையில், ‘சந்தீப் கோஷின் ஆலோசகர் டெபாஷிஷ் ஆவார். சந்தீப் கோஷ் என்ன சொன்னாலும் ெடபாஷிஷ் செய்வார்’ என்றார். இதுகுறித்து ஆர்ஜி கர் கல்லூரியின் முன்னாள் தடயவியல் நிபுணர் கூறுகையில், ‘இந்த வழக்கின் பின்னணியில் அரசியல் உள்ளது. இங்கு ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்’ என்றார்.
சிபிஐ காவலில் உள்ள குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் உளவியல் சோதனை நடத்தப்பட்டது. ஆபாச வீடியோக்களுக்கு அடிமையான அவர், தான் செய்த குற்றத்திற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்றும், மிருகத்தை போன்ற குணம் படைத்தவராக தெரிகிறது என சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், ‘செய்த குற்றத்தை நினைத்து சிறிதளவு கூட துக்கப்படவில்லை. சம்பவத்தன்று ஒவ்வொரு நிமிடமும் என்ன நடந்தது என்பது பற்றி எந்த வித இடர்ப்பாடுமின்றி விவரித்தார். அவருக்கு எந்த வருத்தமும் இல்லை’ என்றார்.மேலும் சஞ்சய் ராயுக்கு பல முறை திருமணம் நடந்துள்ளதாகவும், அவரின் மோசமான நடத்தை காரணமாக மனைவிகள் அவரை விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
கடந்தாண்டு, அவரது மனைவி புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.தினமும் மது குடித்துவிட்டு இரவு தாமதமாக வீடு திரும்புவது அவரது வழக்கமாக இருந்ததாகவும் சஞ்சய் ராயின் அண்டை வீட்டார் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வழக்கில் முன்னாள் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட 4 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் உளவியல் சோதனை நடத்தப்பட உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.