கொல்கத்தா: கொல்கத்தா பாலியல் பலாத்கார வழக்கில் ‘இன்ஹேலர்’ கொடுத்து மாணவியை குற்றவாளி சிதைத்ததாக நீதிமன்றத்தில் அரசு வக்கீல் தெரிவித்த பகீர் தகவலால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில், கடந்த ஜூன் 25ம் தேதி, 24 வயது சட்டப்படிப்பு படிக்கும் மாணவி கொடூரமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், கல்லூரியின் முன்னாள் மாணவரான மனோஜித் மிஸ்ரா (31) முக்கியக் குற்றவாளியாகக் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியதாக ஜைப் அகமது, பிரமித் முகோபாத்யாய் என்ற இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு காவலாளி என நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மனோஜித் மிஸ்ரா, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்புடன் தொடர்புடையவர் என்றும், இவர் மீது ஏற்கனவே பாலியல் சீண்டல், தாக்குதல், திருட்டு எனப் பல புகார்கள் இருந்தும், அரசியல் செல்வாக்கு காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொல்கத்தா நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அப்போது அவர் கூறுகையில், ‘பாலியல் பலாத்கார துன்புறுத்தலுக்கு முன்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவருக்கு ‘இன்ஹேலர்’ கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர் நலம் பெறுவதற்காக மாணவிக்கு ‘இன்ஹேலர்’ கொடுக்கப்படவில்லை; மாறாக, அவர் உடல்நிலை தேறியதும் மீண்டும் அவரை பாலியல் ரீதியாக சிதைப்பதற்காகவே கொடுக்கப்பட்டது. மருத்துவ மற்றும் மின்னணு ஆதாரங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. அந்த மாணவியை சிதைப்பதை மற்ற இரு மாணவர்களும் வீடியோ எடுத்துள்ளனர்’ என்று அவர் குறிப்பிட்டார். இதனைக் கேட்ட நீதிமன்றம், முக்கிய குற்றவாளி மனோஜித் மிஸ்ரா மற்றும் இரு மாணவர்களை வரும் 8ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து தீவிரமாக விசாரிக்கவும், கைதான காவலாளியை நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்கவும் உத்தரவிட்டனர். பாலியல் பலாத்காரத்திற்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்ட மாணவிக்கு ‘இன்ஹேலர்’ கொடுத்து கொடுமையை அரங்கேற்றிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘இன்ஹேலர்’ என்றால் என்ன?
‘இன்ஹேலர்’ என்பது மருத்துவ சாதனமாகும். இது நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தை நேரடியாக நுரையீரலுக்கு அனுப்ப பயன்படுகிறது. பொதுவாக ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இன்ஹேலர் மருத்துவ சாதனமானது, மருந்தை மூச்சு வழியாக உள்ளிழுக்க உதவுகிறது. இதனால் மருந்து விரைவாக நுரையீரலில் அனுப்பப்படுகிறது. அவ்வாறு செய்வதால், மூச்சுத் திணறல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.