ருத்ராப்பூர்: உத்தபிரதேசம்,ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் உத்தரகாண்ட் மாநிலம்,ருத்ராப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 30ம் தேதி பணிக்கு சென்ற அந்த பெண் வீடு திரும்பவில்லை.இது குறித்து அவரது செல் போன் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 8ம் தேதி உ.பியின் டிப்டிபா கிராமத்தில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய முகம் அடையாளம் தெரியாத அளவு சிதைந்த நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் கொலை தொடர்பாக, உபி மாநிலம் பரேலியை சேர்ந்த தர்மேந்திரா என்பவனை ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறுகையில்,‘‘நர்ஸ் பணி முடிந்து வீடு திரும்பும் போது தர்மேந்திரா அவரை பின் தொடர்ந்து சென்றார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரை இழுத்து சென்றார். பின்னர் சால்வையால் கழுத்தை நெரித்தார்.
இதில் அவர் கீழே மயங்கி விழுந்தார். அப்போது அவரிடம் இருந்த பணத்தை எடுத்துள்ளார். அதன் பின்னர் நர்சை பலாத்காரம் செய்து விட்டு கல்லால் தலையில் தாக்கி உள்ளார். இதில் அந்த பெண் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்’’ என்றனர். கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உபியில் நர்ஸ் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.