கொல்கத்தா: நடப்பு உலக கோப்பைத் தொடரில், கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் முதல் போட்டியில் நெதர்லாந்து – வங்கதேசம் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை தலா 5 லீக் ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று வங்கதேசம் 8வது இடத்திலும், நெதர்லாந்து கடைசி இடத்திலும் பின்தங்கியுள்ளன. எஞ்சியுள்ள 4 போட்டியிலும் வென்றாலும் கூட அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கேள்விக்குறிதான் என்றாலும், வெற்றி முனைப்புடனேயே இந்த அணிகள் களமிறங்குகின்றன. பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்காவுக்கு ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அதிர்ச்சி தோல்வியை பரிசளித்திருப்பதால், வங்கதேசம் மிகவும் கவனமாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
* இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளதில் 1-1 என சமநிலை வகிக்கின்றன.
* நடப்பு உலக கோப்பையில், கொல்கத்தாவில் நடைபெற உள்ள அரையிறுதி உட்பட 5 ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று தான் நடைபெற உள்ளது.
* அகமதாபாத் அரங்கத்துக்கு முன்பு நாட்டின் பெரிய அரங்கமாக இருந்த ஈடன் கார்டனில் இதுவரை 31 ஒருநாள் ஆட்டங்கள் நடந்துள்ளன.
* இங்கு முதலில் பேட் செய்த அணி 17 வெற்றி, சேஸ் செய்த அணி 12 வெற்றி பெற்றுள்ளன (1 போட்டி மழையால் கைவிடப்பட்டது)
* 1996 உலக கோப்பை முதல் அரையிறுதியில் இலங்கை – இந்தியா மோதின. இந்தியா தோற்கும் நிலைமை ஏற்பட்டதால், ரசிகர்கள் ரகளையில் இறங்க… ஆட்டம் நிறுத்தப்பட்டு இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த முறை இலங்கை கோப்பையையும் வென்றது.