புதுடெல்லி: நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி இரவுப் பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு படித்த பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மருத்துவமனை கருத்தரங்கு அறையில் கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது, மாநில போலீசாரிடம் இருந்து வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் பெண் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் வழக்கை தாமாக எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், கொலையான பெண் டாக்டரின் தாயார் கூறுகையில், ‘‘சம்பவத்திற்கு முன்பு கூட இந்த மருத்துவமனையில் வேலை செய்வது பிடிக்கவில்லை என எனது மகள் கூறிக் கொண்டிருந்தார்.
இறந்த என் மகளின் முகத்தை பார்க்கக் கூட எங்களை அலைக்கழித்தார்கள். பலமுறை கெஞ்சியதால் 3 மணி நேர தாமதத்திற்குப் பிறகு தான் பார்க்க விட்டனர். அவர் நிச்சயம் கருத்தரங்கு அறையில் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. வேறு எங்கேயோ கொலை செய்யப்பட்டு, கருத்தரங்கு அறையில் உடல் கொண்டு வந்து போடப்பட்டிருக்கும். இந்த கொடூரத்தில் சம்மந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.
* மருந்து திருட்டு விவகாரம் காரணமா?
இந்த வழக்கில் தினம் தினம் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியானபடி உள்ளது. தற்போது கொலையான பெண் டாக்டருடன் பணியாற்றிய சக பயிற்சி டாக்டர்கள் சிலர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி, பெண் பயிற்சி டாக்டர் குறிவைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் கிளப்பி உள்ளனர். கொல்லப்பட்ட பெண் மருத்துவருடன் பணியாற்றிய சக பயிற்சி டாக்டர்கள் கூறுகையில், ‘‘இது வெறும் பலாத்காரம், கொலை வழக்கு அல்ல.
கொலையான பெண் டாக்டர், ஏற்கனவே 36 மணி நேர தொடர்ச்சியான ஷிப்ட் உள்ளிட்ட சில பணி அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். அவரது பணிப்பிரிவில் மருந்து கடத்தல், மோசடி தொடர்பான சில விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கக் கூடும். அதை அவர் வெளியில் சொல்லிவிடுவார் என்பதற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம். இதில், கைதான சஞ்சய் ராய் சிறிய மீன்தான். இதில் பெரிய ஆட்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம். ஏனெனில் கருத்தரங்கு அறையில் பெண் டாக்டர் தனியாக இருக்கும் விஷயம் சஞ்சய் ராய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இது திட்டமிட்ட சதியாக இருக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.
* மருத்துவமனை அருகே மக்கள் கூட தடை
பெண் பயிற்சி டாக்டர்கள் கொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவமனை அருகிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இத்தகைய போராட்டங்களால் தீவிர சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் ஆபத்து இருப்பதால் வரும் 24ம் தேதி வரை மருத்துவமனை அருகே பொதுமக்கள் கூட கொல்கத்தா போலீசார் தடை விதித்துள்ளனர்.
* பத்ம விருது பெற்ற டாக்டர்கள் கடிதம்
70க்கும் மேற்பட்ட பத்ம விருது பெற்ற டாக்டர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். ஐசிஎம்ஆர் முன்னாள் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவ், டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் எழுதிய இக்கடிதத்தில், மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள சிறப்புச் சட்டத்தை விரைவாக இயற்ற வேண்டும் எனவும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர். இதுபோன்ற கொடுமைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்று பத்ம விருது பெற்ற டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.