புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுகலை பெண் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதிகேட்டு நேற்று நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார். அனைத்து மாநிலங்களிலும் இந்த போராட்டம் நடந்தது. இதனால் அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர மற்ற மருத்துவ சிகிச்சைகள் நேற்று காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவ சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷ் நேற்று 2ம் நாளாக சிபிஐ முன்பு ஆஜரானார். வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆஜரான அவரிடம் நேற்று அதிகாலை 1.40 மணி வரை விசாரணை நடந்தது. தொடர்ந்து 2ம் நாளாக நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரதமர் தலையிட கோரிக்கை: கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் ‘பிரதமர் தலையிடுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் (ஐஎம்ஏ) தேசியத் தலைவர் டாக்டர் ஆர்.வி.அசோகன், ‘கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். பிரதமர் தலையிடுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது தொடர்பாக நாங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதுவோம். அவரது தலையீட்டைக் கோருவோம்’ என்றார்.
* டாக்டர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க குழு
கொல்கத்தா சம்பவம் தொடர்பாக ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ரெசிடென்ட் டாக்டர்கள் கூட்டமைப்பு உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் ஒன்றிய சுகாதார துறை அமைச்சரை சந்தித்தனர். பணியிடங்களில் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்கள் சங்கங்கள் வெளிப்படுத்திய கவலைகளை கருத்தில்கொண்டு சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்கு குழு அமைக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
போராடும் மருத்துவர்களின் 5 கோரிக்கைகள்
* உறைவிட மருத்துவர்களுக்கு 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை.
* சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும்.
* கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
* விமான நிலையங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். அதேபோல் குறைந்தபட்சம் பெரிய மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
* குற்றத்தின் தன்மைக்கேற்ப கொல்கத்தாவில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு கண்ணியமான இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.