*மருத்துவ கல்லூரியிலும் ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை
*கலெக்டர், போலீஸ் கமிஷனர் நள்ளிரவில் தீடீர் விசிட்
மதுரை : கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகங்கள் முழு கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மதுரையில் நேற்று நடந்த பாதுகாப்பு குறித்த டாக்டர்கள், மாணவர்கள், போலீசார் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடும் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள டாக்டர்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில் கொல்கத்தா பெண் டாக்டர் கொலைச் சம்பவம் எதிரொலியாக மதுரை அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவகல்லூரியில் பயிலும் மருத்துவ பயிற்சி மாணவர்கள், டாக்டர்கள், செவிலியர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் நேற்று மதுரை அரசு மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மதுரை நகர் போலீஸ் துணை கமிஷனர் மதுகுமாரி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அரசு மருத்துவமனை டீன் தர்மராஜ், அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர்.செந்தில், நிலைய மருந்து அலுவலர் சரவணன் மற்றும் அனைத்துதுறை டாக்டர்கள், மருத்துவகல்லூரி பயிற்சி மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் டாக்டர்கள் பேசும்போது, ‘‘அரசு மருத்துவமனைக்குள் வெளி நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நோயாளிகளின் உறவினர்கள் மது அருந்திவிட்டு மருத்துவமனைக்கு வரும்போது இரவு நேரங்களில் டாக்டர்கள், நர்ஸ்கள்பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே போலீசார் ரோந்து பணிகளில் கூடுதல் கவனம் காட்ட வேண்டும். அரசு மருத்துவமனையின் கீழ் செயல்படும் 3 மருத்துவமனைகளையும், ஒரே காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை காவல்நிலையத்தில் போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவமனை சாலை ஒருவழிப்பாதையாக இருப்பதால் இரவு நேரங்களில் மருத்துவமனையை சுற்றிவரும்போது டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. செயின்பறிப்பு சம்பவங்களும் நடைபெறுகிறது’’ என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து டாக்டர்களின் கோரிக்கைகள் குறித்து போலீஸ் துணை கமிஷனர் மதுகுமாரி பேசும்போது, ‘‘மதுரை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவகல்லூரியில் டாக்டர்கள், மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எப்போதும் போலீசாரின் உதவியை நாடும் வகையில் 2 வாட்சப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் புகார்களை அளிக்கலாம். மேலும் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை போலீசார் மருத்துவமனை மற்றும் மருத்துவகல்லூரி வளாகத்தில் ரோந்து பணிகளில் ஈடுபடுவர். இப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
மருத்துவமனையில் தன்னார்வ அமைப்புகள் உணவு வழங்குவது தொடர்பாக உரிய கட்டுப்பாடுகள், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றபடும். மருத்துமவனைக்குள் சமூக விரோதிகள் நடமாட்டம் ஒடுக்கப்படும். மருத்துவமனை சாலையில் இரவு நேரத்தில் ஒருவழிப்பாதை இருவழிபாதையாக மாற்றுவது, வேகத்தடைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார். தொடர்ந்து மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கான காவலன் மொபைல் ஆப் செயலியின் செயல்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்து வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.
போலீஸ் கமிஷனர் திடீர் விசிட்
மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவகல்லூரி மாணவர்கள், செவிலியர்கள், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் ரோந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நாள்தோறும் மாலை நேரங்களில் வாக்கி டாக்கி மூலமாக தொடர்ந்து கேட்டுவருகிறார்.
இந்நிலையில் ேநற்றிரவு மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு திடீரென ஆய்வுக்கு சென்ற மாநகர காவல் ஆணையர் லோகநாதன் காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும் அங்குள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவர்களின் வருகை குறித்தும், ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் குறித்து உடனடியாக புகார் மனு பெற்று உரிய தீர்வு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அறிவுரை வழங்கினார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் கேட்பார் இன்றி நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரணை நடத்தி சமூக விரோதிகளின் செயல்பாடுகள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
அனுமதி அட்டை வழங்க அறிவுறுத்தல்
மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏராளமான தெரு விளக்குகள் எரியாமல் இருந்த நிலையில் இது போன்று இருட்டாக இருக்கிறது எனவும் தயவுசெய்து தெருவிளக்குகளயாவது சரி செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வார்டு பகுதிகளாக முழுவதிலும் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தேவையற்ற வாகனங்களை உள்ளே நிறுத்த அனுமதிக்க கூடாது எனவும் , மருத்துவமனை வளாகம் முழுவதிலும் நன்கு வெளிச்சமாக இருக்கக்கூடிய வகையில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து மருத்துவமனை அதிகாரிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தேவையற்ற நபர்கள் அரசு மருத்துவமனைக்குள் வருவதை தவிர்க்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் மற்றும் மருத்துவமனை நிலைய அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.