ராய்கட்: மராட்டியத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதத்தில் சுக்கு நூறாக உடைந்து விழுந்த விவகாரத்தில் சிலை செய்த சிற்பியை போலீசார் கைது செய்தனர். மராட்டிய மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் மாதம் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட 35அடி உயரம் கொண்ட இந்த சிலை திறந்து வைக்கப்பட்ட 8 மாதங்களில் கடந்த மாதம் 26ம் தேதியன்று கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் இடிந்து விழுந்தது.
திறக்கப்பட்ட 8மாதங்களில் சிலை உடைந்து விழுந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக கூட்டணி அரசே இதற்கு முக்கிய காரணம் என்று கூறி போராட்டங்களும் நடைபெற்றன. கண்டனம் வழுத்ததை அடுத்து சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்காக பிரதமர் மோடியும் மன்னிப்பு கோரினார். இதற்கிடையே சிலையை வடிவமைத்த சிற்பி ஜெய்தீப் ஆப்தே என்பவர் மீது மராட்டிய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால் லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தானே மாவட்டத்தில் சிற்பி ஜெய்தீப் ஆப்தேவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதனிடையே திட்ட குறைபாடே சத்ரபதி சிவாஜி சிலை சேதமடைய காரணம் என்று ஒன்றிய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி கூறியிருக்கிறார். துரு பிடிக்காத எஃகு மூலம் சிலை தயாரிக்கப்பட்டு இருந்தால் அது சேதம் அடைந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். கடற்கரையொட்டி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களில் துரு பிடிக்காத எஃகுவை தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசு நிறுவிய சிலையில் திட்ட குறைபாடுகள் இருந்ததை அக்கட்சியின் மூத்த அமைச்சரே சுட்டிக்காட்டி இருப்பது மராட்டிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.