மாதவரம்: கொளத்தூர் பகுதியில் தாய் கண்முன்னே நீச்சல் பயிற்சியின்போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக, நீச்சல் பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொளத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலேக்கர் (38). திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி.
இவர்களது மகன் கிருத்திக் சபரீஸ்கர் (10). சிறப்பு குழந்தையாக வளர்ந்து வந்த சிறுவனுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது. இதற்காக கொளத்தூர், அசோகா அவென்யூ பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நீச்சல் பயிற்சி மையத்தில் சிறுவனுக்கு வாரத்தில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் வழக்கம்போல் சிறுவனின் தந்தையும், தாயும் சிறுவனை அழைத்துக்கொண்டு நீச்சல் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பயிற்சிக்காக விட்டுள்ளனர். சிறுவனின் தந்தை அலுவலக நிமித்தமாக காரில் அமர்ந்தபடி லேப்டாப்பில் வேலை செய்துள்ளார். தாய் ராணி சிறுவனின் அருகில் இருந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் முறையை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீச்சல் பயிற்சியாளர் சிறுவனுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சிறுவன் நீரில் தத்தளித்துக் கொண்டு மூழ்கியபடி இருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், எனது மகன் நீரில் மூழ்குகிறான், என்னவென்று பாருங்கள் என பயிற்சியாளரிடம் கூறியுள்ளார். ஆனால், பயிற்சியாளர் பார்ப்பதற்குள் சிறுவன் கிருத்திக் சபரீஸ்கர் நீச்சல் குளத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் மிதந்தபடி இருந்துள்ளான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் ராணி, செல்போன் மூலம் தனது கணவரை அழைத்து விவரங்களை கூறியுள்ளார். இதை தொடர்ந்து, சிறுவனை நீச்சல் குளத்தில் இருந்து மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை அழுதபடி சம்பந்தப்பட்ட நீச்சல் பயிற்சி மையத்திற்கு வந்து, அங்கிருந்த நீச்சல் பயிற்சி மைய மேலாளர் மற்றும் பயிற்சியாளரிடம் ‘நீச்சல் கற்றுத் தருவதாகக் கூறி எனது மகனை சாகடித்து விட்டீர்களே’ எனக்கூறி அழுதனர்.
இந்த தகவல் கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அவினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.