சென்னை: சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 தாலுகாக்கள் உள்ளன. இதில் அயனாவரம் தாலுகாவில் உள்ள கொளத்தூரை பிரித்து புதிய கொளத்தூர் தாலுகா உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு செயலாளர் ராஜராமன் வெளியிட்டுள்ள அரசாணை: சென்னை மாவட்டத்தில் உள்ள மத்திய சென்னை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அயனாவரம் தாலுகாவை சீரமைத்து கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது. தற்போது அயனாவரம் தாலுகாவில் கொளத்தூர், பெரவள்ளூர், கொன்னூர் மற்றும் அயனாவரம் என 4 பகுதிகள் உள்ளன. அதில் கொளத்தூரை தலைமையிடமாக கொளத்தூர் என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.
6.24 சதுர கி.மீ. கொண்ட கொளத்தூர் வட்டத்தில் கொளத்தூர் மற்றும் பெரவள்ளூர் அதன் பகுதிகளான சிறுவள்ளூர், சின்னசெம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இனி அயனாவரம் தாலுகாவில் கொன்னூர் அதன் பகுதிகளான மல்லிகைச்சேரி, மற்றும் அயனாவரம் அதன் பகுதிகளான அயனாவரம் பகுதி-1 மற்றும் பகுதி-2 ஆகியவை இருக்கும். புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூரில் 3,78,168 பொதுமக்கள் வசிக்கிறார்கள். அங்கு பொதுப்பிரிவு, நகர்ப்புற நிலவரி திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட புதிய அரசு பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளன.