பெரம்பூர்: கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 25வது தெருவில் முத்துமாரியம்மன் கோயில் குளத்தின் கரை அருகே சுமார் 8 குடியிருப்புகள் உள்ளன. இதில் சுமார் 43 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வசித்து வரும் வீட்டின் வெளியே ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பார்க்கிங் மற்றும் நிழற்குடை உள்ளிட்டவைகளை அமைத்திருந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறியும் ஆக்கிரமிப்புகளை அவர்கள் அகற்றவில்லை.
இந்நிலையில் சென்னை திருவிக நகர் மண்டல அதிகாரி முருகன் மேற்பார்வையில் செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர் கோபி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ஜானகி சாம்ராஜ் மற்றும் பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று, குளத்தின் கரையை ஆக்கிரமித்து இருந்த இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
இதன் மூலம் குளத்திற்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.