மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு, புதிய கல்பாக்கம் பகுதிகளில் கடலரிப்பை தடுக்கும் வகையில் ரூ.17.46 கோடியில் நடைபெற்று வரும் நேர்கல் தடுப்பு அமைக்கும் பணியை கலெக்டர் ராகுல்நாத், எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கிலமேடு, நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட புதிய கல்பாக்கம் ஆகிய மீனவ குப்பத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில், பல ஆண்டுகளாக கடல் அலைகள் முன்னோக்கி வந்து மணல் அரிப்பு ஏற்பட்டு, அருகில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தது.
இதனால், மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும், புதிய கல்பாக்கம் கடற்கரைக்கு அருகில் உள்ள வீடுகள் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. கடலரிப்பை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொக்கிலமேடு, புதிய கல்பாக்கம் மீனவர்கள் தமிழக அரசுக்கும், மீன்வள துறைக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, கடந்தாண்டு கொக்கிலமேடு பகுதியில் ரூ.9.46 கோடியும், புதிய கல்பாக்கம் பகுதியில் ரூ.8 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கல்பாக்கம் பகுதியிலும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொக்கிலமேடு பகுதியிலும் கடலரிப்பை தடுக்கும் வகையில் நேர்கல் தடுப்பு அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகளை, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, கலெக்டர் ராகுல்நாத், டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடிக்கவும், நேர்கல் தடுப்பின் நீளம், அகலம் ஆகியவற்றை மீனவ மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஷ்வரி, திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, திருக்கழுக்குன்றம் துணை தாசில்தார் சையது அலி, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகலை செல்வன், லாவண்யா, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள் தேவி, சசிகலா, மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ரகு, மாமல்லபுரம் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், விஏஓக்கள் மணிகண்டன், வடிவேல், நெம்மேலி தலைவர் ரமணிசீமான், எடையூர் தலைவர் சாமுண்டீஸ்வரி, நெம்மேலி கவுன்சிலர் தேசிங்கு, மாமல்லபுரம் விசிக நகர செயலாளர் ஐயப்பன், ஒன்றிய பொறுப்பாளர் எழில் ராவணன், மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மீனவ மக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.