அகமதாபாத்: ஐபிஎல் போட்டிகளில் விராட் கோஹ்லி இடம் பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 17 ஆண்டுகளாக வெற்றி பெற முடியாமல் தவித்து வந்தது. கடைசியாக நேற்று முன்தினம் நிறைவு பெற்ற இறுதிப் போட்டியில் அந்த அணியின் வெற்றிக் கனவு நனவானது.
அதையடுத்து கலங்கிய கண்களுடன் நிருபர்களை சந்தித்த விராட் கோஹ்லி உணர்ச்சிப் பெருக்குடன் கூறியதாவது:
கடந்த 17 ஆண்டுகளாக எந்தளவு மனக் கஷ்டத்தை அனுபவித்தேன் என்பதை வெறும் வார்த்தைகளால் கூற இயலாது. என் இளமை, முக்கியத்துவம் வாய்ந்த நேரம், அனுபவம் அனைத்தையும் பெங்களூரு அணிக்காக அர்ப்பணித்தேன். போட்டி நடைபெற்ற மைதானத்தில் பல முறை அழுவதை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டேன்.
இந்த மகத்தான வெற்றியை என் குடும்பத்தினருக்கு, குறிப்பாக என் அனைத்து சோதனை நாட்களிலும் என்னுடன் இருந்து சமாதான வார்த்தைகள் கூறி தேற்றி, என்னை தொடர்ந்து துடிப்புடன் ஆடச் செய்த மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். இன்றைய தேதியின் கூட்டுத் தொகையும், ஐபிஎல் சீசன் எண்ணும் 18 ஆக அமைந்துள்ளது. கடவுளுக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.