லக்னோ: ஐபிஎல் 18வது தொடரின் 70வது மற்றும் கடைசி லீக் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. அதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், மேத்யூ பிரீட்ஸ்கி களமிறங்கினர். மேத்யூ 14 ரன்னில் அவுட்டானார். அடுத்த வந்த கேப்டன் ரிஷப் பண்ட், மார்ஷுடன் சேர்ந்து, பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பண்ட், 29 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
அதிரடியாக விளையாடிய மார்ஷ் 67 ரன் (37 பந்து, 5 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நிகோலஸ் பூரன் களமிறங்கினார். அதிரடி காட்டிய பண்ட் 54 பந்தில் சதம் அடித்தார். பூரன் 13 ரன்னில் வெளியேற 20 ஓவர் முடிவில், லக்னோ அணி, 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன் குவித்தது. பண்ட் 118 ரன் (61 பந்து, 8 சிக்சர், 11 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 228 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்கியது.
துவக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர். இருவரும் அதிரடியாக நிலையில் சால்ட் 30 ரன் (19 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பட்தார் 14 ரன்னிலும், லிவிங்ஸ்டன் ரன் ஏதுவும் எடுக்காமலும் நடையை கட்டினர். சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி 54 ரன் (30 பந்து, 10 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த மயங்க் அகர்வால், கேப்டன் ஜித்தேஷ் சர்மா, லக்னோ பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
18.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து பெங்களூரு அணி 230 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஜித்தேஷ் சர்மா 85 ரன் (33 ரன், 6 சிக்சர், 8 பவுண்டரி), மயங்க் அகர்வால் 41 ரன் (23 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 2ம் இடத்தை பிடித்தது. 29ம் தேதி நடக்கும் குவாலிபயர் 1ல் பஞ்சாப்-பெங்களூருவும், 30ம் தேதி நடக்கும் எலிமினேட்டரில் குஜராத்-மும்பையும் மோத உள்ளனர்.