தண்டையார்பேட்டை: கொடுங்கையூர் எழில் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடந்து வருகிறது. இதனால், இந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. மேலும் கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கீழே ஆக்கிரமிப்பு செய்து 6 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. தற்போது பாலப் பணிகளுக்காக ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் மாற்று வழியாக வாகனங்கள் இயக்கப்படுவதற்காக ஆக்கிரமிப்பு செய்து இருந்த 6 வீடுகள் நேற்று பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. அதற்கு மாற்றாக 6 வீடுகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் முயற்சியால் வீடு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஆனால், அந்த பகுதியில் உள்ள அதிமுகவினர் வீடு கிடைக்காது என்று வதந்தியை பரப்பி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் இருந்த 6 வீட்டின் உரிமையாளர்களும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் மற்றும் பகுதி திமுக செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மாற்றாக 6 வீடுகளுக்கும் வீடு வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனால் அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.