கோபி : கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
கொடிவேரி அணையில் இருந்து ஆண்டுதோறும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்காக இரு போக சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து 10 மாதங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவது வழக்கம்.
தடப்பள்ளி வாய்க்கால் மூலமாக காசிபாளையம், கரட்டடிபாளையம், கோபி, மேவாணி, புதுக்கரைபுதூர் வழியாக பி.மேட்டுப்பாளையம் வரை சுமார் 70 கி.மீ தூரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 17,500 ஏக்கர் விளை நிலங்களும், அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலமாக அரக்கன்கோட்டை, வாணிப்புத்தூர், பங்களாபுதூர், கள்ளிப்பட்டி வரை சுமார் 25 கி.மீ தூரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 7,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. வழக்கமாக ஏப்ரல் மாதம் தண்ணீர் திறக்கப்படும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் காரணமாக மே மற்றும் ஜூன் மாதங்களிலேயே தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 71.92 அடியாகவும், 11.77 டி.எம்.சியாகவும் உள்ள நிலையில் பருவ மழை காரணமாக பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணைக்கு 15,657 கன அடியாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு முதல்போக சாகுபடிக்கு கொடிவேரி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, உதவி பொறியாளர்கள் குமார், அருணாச்சலம், டி.என்.பாளையம் திமுக ஒன்றிய செயலாளர் சிவபாலன், கொடிவேரி அணை பாசனதாரர் சங்க தலைவர் தளபதி மற்றும் பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டு அணையில் இருந்து வாய்க்கால்களில் தண்ணீரை திறந்து வைத்தனர்.
தடப்பள்ளி வாய்க்காலில் இருந்து முதல்கட்டமாக 200 கன அடியும் அதைத்தொடர்ந்து படிப்படியாக 735 கன அடி தண்ணீரும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல்கட்டமாக 100 கன அடி தண்ணீரும் அதைத்தொடர்ந்து படிப்படியாக 375 அடியாக வழங்கப்படும்.
இது முதல் செப்டம்பர் மாதம் 22ம் தேதி வரை 120 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். நிகழ்ச்சியில் வாணிப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சிவராஜ், பெரியகொடிவேரி பேரூராட்சி தலைவர் தமிழ்மகன் சிவா, கூகலூர் மாரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
பருவ மழை தொடங்கி உள்ள நேரத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதால், குறைந்த அளவு வாய்க்கால் தண்ணீரை வைத்தே விவசாயம் செய்ய முடியும். அதே நேரத்தில் இது போன்று 45 நாட்கள் தாமதமாக தண்ணீர் வழங்கப்படுவதால், பருவ மழை காலத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி விடுகிறது.
இதே போன்று ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் இயந்திரங்களை பயன்படுத்தியே அறுவடை செய்யப்படுகிறது. இந்நிலையில் பருவ மழை காலத்தில் அறுவடை செய்ய வேண்டி இருப்பதால் வயல்களில் தண்ணீர் தேங்கி விடுவதால் இயந்திரங்கள் மூலமாகவும் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது.
இதனால் அரசு கடந்த ஆண்டுகளை போலவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வேண்டும். அதேபோன்று விதை நெல் 200 டன் தேவை என்ற நிலையில் 25 டன் அளவிற்கே வைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.