*கட்டுப்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை
கோபி : கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் மது அருந்தும் குடிமகன்களை கட்டுப்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணையாகும்.
சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் விழுவதால் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
குறிப்பாக, குறைந்த செலவில் விடுமுறையை உற்சாகமாக கழிக்க முடியும் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலங்களில் இருந்தும் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள், பவானி ஆற்றங்கரையில் இயற்கையாக அமைந்துள்ள நீண்ட மணற்பரப்பில் அமர்ந்து, கடற்கரையில் இருப்பது போன்ற உற்சாகமான மன நிலையில் சுவையான உணவுகளை சாப்பிட்டும், குழந்தைகளுடன் மணல் வீடு கட்டியும் பெண்கள் விளையாடி வருகின்றனர்.
இதனாலேயே இங்குள்ள மணற்பரப்பை பொதுப்பணித்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் கீழ் மீன் மற்றும் உணவு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பாலத்தின் அருகில் உள்ள மணற்பரப்பில் குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துவதும், அதற்கு அங்குள்ள மீன் விற்பனையாளர்கள் சிலர் உறுதுணையாக இருப்பது சுற்றுலா பயணிகளை வேதனை அடைய வைத்துள்ளது. இதனால் மணற்பரப்பில் குழந்தைகளுடன் அமர்ந்து விளையாட பெண்கள் அச்சமடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கொடிவேரி அணைக்குள் மது அருந்தி செல்பவர்களை தடுத்து வெளியேற்றப்பட்ட நிலையில் சமீப காலமாக அணைக்குள்ளேயே மது அருந்தும் அளவிற்கு குடிமகன்களின் அட்டகாசம் பெருகி உள்ளது.
பொதுப்பணித்துறையினர் பவானி ஆற்றில் மது அருந்துவதை தடுப்பதுடன், மது அருந்த அனுமதிக்கும் மீன் விற்பனை கடைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.