திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே காலையில் கொடி ஏற்றப்பட்ட நிலையில் மலையில் கொடிக்கம்பமே காணவில்லை என தமிழர் வாழ்வுரிமைகள் கட்சியினர் புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நாச்சிபட்டு குன்னியேந்தல் உள்ளிட்ட 10 கிராமங்களில் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் கட்சி கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
இந்த நிலையில் கீழ்நாற்றுப்பட்டி கிராமத்தில் நேற்று காலை கொடி ஏற்றப்பட்ட நிலையில் மலையில் கொடி கம்பமே காணாமல் போனது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடிக்கம்பத்தை பாமகவை சேர்ந்த பிரபு உள்ளிட்ட 10 பேர் பிடுங்கி எடுத்து சென்றதாக கூறி திருவண்ணாமலை, திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வேணுகோபால் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்ட நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் கொடிக்கம்பத்தை எடுத்து சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் மிகப்பெரும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.