ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ் கார் விபத்தில் மர்மமாக உயிரிழந்தார். சயான், வாளையாறு மனோஜ், தீபு, ஜம்சீர் அலி, சதீசன், பிஜின் குட்டி, உதயகுமார், மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, ஜித்தின் ஜாய், கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 12 பேர் கைதாகி ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் அந்த 12 பேரின் கணக்கு உள்ள வங்கிகளுக்கும், கோவையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2017 ஏப்ரல் 23ம் தேதி முதல் தற்போது வரை இவர்களது வங்கிக்கணக்கில் நடைபெற்றுள்ள பண பரிவர்த்தனை விவரங்களை வழங்குமாறு கேட்டுள்ளனர். மேலும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வங்கி பரிவர்த்தனை விவரங்களையும் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.