ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கூடுதல் எஸ்பி குமாரவேல் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் வழக்கு தொடர்பான 4 பக்க அறிக்கையை கடந்த செப்டம்பர் மாதம் ஊட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய ஜம்ஷீர் அலி, தீபு ஆகியோரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகளில் பதிவான தகவல் பரிமாற்ற விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளது. பதிவான அந்த தகவல்களை பெற்ற சிபிசிஐடி போலீசார் அது தொடர்பான 3 பென்டிரைவ்களை மாவட்ட நீதிபதி அப்துல் காதரிடம் ேநற்று ஒப்படைத்துள்ளனர். 3 பென்டிரைவ்களும் விரைவில் கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தகவல்கள் பதிவு செய்து பெறப்பட உள்ளது. இந்த ஆய்வு மூலம் சிபிசிஐடி போலீசாருக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.