ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான 3 பென் டிரைவ்களை ஊட்டி கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் இன்று ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது.
இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஒரு கும்பல் நுழைந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர் பங்களாவுக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, தீபு உள்பட 10 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பான 4 பக்க அறிக்கை கடந்த 2 மாதங்களுக்கு முன் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார், 3 பென் டிரைவ்களை இன்று காலை ஊட்டி கோர்ட்டில் நீதிபதி அப்துல்காதரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஜம்சீர் அலி, தீபு ஆகியோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான தகவல்கள் குறித்தும் நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.