ஊட்டி: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஜெயலலிதா கார் டிரைவரின் செல்போன் தடயங்கள் ஆய்வுக்காக குஜராத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசிக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சோலூர் மட்டம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளை கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 167 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி போலீசார் இதுவரை தங்களது விசாரணை குறித்த 4 பக்க இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணை வந்தது. குற்றவாளி வாளையார் மனோஜ் மட்டுமே ஆஜராகினார். அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராகினர்.
விசாரணை தொடங்கியதும் நீதிபதியிடம் அரசி வக்கீல் ஷாஜகான், “சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலத்தில் கனகராஜ் செல்போன்களில் பேசியது தொடர்பாக சேகரிக்கப்பட்ட தடயங்களை ஆய்வுக்காக குஜராத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சில எலக்ட்ரானிக் தடயங்கள் ேசரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ள மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்றார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் காதர், வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.