கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த எஸ்டேட்டுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சசிகலா நேற்று வந்தார். இதை தொடர்ந்து இன்று காலை கொடநாடு எஸ்டேட் பகுதியில் உள்ள காட்சி முனைக்கு செல்லும் பிரதான சாலை அருகே 10ம் நம்பர் நுழைவு வாயில் பகுதியில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைப்பதற்கும், மணி மண்டபம் கட்டுவதற்கும் பூமி பூஜை நடந்தது. இதில் சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘நான் இதுவரை அம்மா (ஜெயலலிதா) இல்லாமல் கொடநாடு வந்ததில்லை. அவருக்கு ரொம்ப பிடித்த இடம் என்பதால் சாஸ்திரம் மற்றும் வாஸ்துபடி, இந்த இடத்தை தேர்வு செய்து ஜெயலலிதாவிற்கு சிலை நிறுவி, மணி மண்டபம் கட்ட இன்று பூமி பூஜை செய்யப்பட்டது. குறிப்பாக கொடநாடு காட்சி முனை சுற்றுலா தலமாக இருப்பதால் அனைத்து மக்களும் வந்து பார்த்து செல்லும் அளவிற்கு அமைக்கப்படும். அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும். இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற ஆகஸ்ட் மாதத்துக்குள் சிலை மற்றும் மணி மண்டபம் திறக்கப்படும்’’ என்றார்.