கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த தனிப்படையில் இருந்த போலீசார் மகேஸ்குமார், விஜயகுமார், ரமேஷ்குமார், பசுபதி, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து, சிறப்பு எஸ்ஐ மகேஸ்குமார் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த 25ம் தேதி ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மற்ற போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்களை மற்றொரு நாள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிமுக பிரமுகர் சங்கரன், ஆம்புலன்ஸ் டிரைவர் கபீர், மின் வாரிய ஊழியர் சுரேஷ் ஆகிய 3 பேருக்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் நேற்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் டிஎஸ்பி அண்ணாதுரை விசாரணை நடத்தினார். அப்போது மின் வாரிய ஊழியர் சுரேசிடம் கொடநாடு எஸ்டேட் கணினி பணியாளர் தினேஷ் தற்கொலை செய்து கொள்ளும்போது மின் தடை ஏற்பட்டது தொடர்பாக பல கேள்விகளை கேட்டு விசாரித்தார். அதேபோல ஆம்புலன்ஸ் டிரைவர் கபீர் மற்றும் அதிமுக பிரமுகர் சங்கரனிடம் சயனின் மனைவி, குழந்தை மற்றும் கனகராஜ் ஆகியோர் விபத்தில் இறந்தது, தினேஷ் தற்கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
அதே நேரத்தில், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனுக்கு நேற்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. அவருக்கும் மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.