நீலகிரி: கொடநாடு வழக்கில் ஜாமினில் உள்ள 12 பேரின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி முதல் இந்த வழக்கு சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொடநாடு வழக்கில் ஜாமினில் உள்ள 12 பேரின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கி கணக்கு பரிவர்த்தனை விவரங்களை கேட்டு தேசிய வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்த நிலையில், சயான், வாளையாறு மனோஜ், தீபு, ஜம்சீர் அலி, சதீசன், பிஜின் குட்டி, உதயகுமார், மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, ஜித்தின் ஜாய், தனபால், ரமேஷ் ஆகிய 12பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டது. இந்த வழக்கில் 12 பேரையும் அழைத்து சிபிசிஐடி விசாரணை நடத்தியதை அடுத்து கொலை, கொள்ளை நடந்த 2017 ஏப்.23 முதல் தற்போது வரை உள்ள வங்கி கணக்கு பரிவர்த்தனை விவரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 12 பேரின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்களின் வங்கி பரிவர்த்தனை விவரங்களையும் சிபிசிஐடி கேட்டுள்ளது.