சென்னை: கோடம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீடுகளில் பேப்பர் போடும் வேலை செய்யும் அவரது கணவர், வழக்கம் போல் வெளியில் சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட கோடம்பாக்கம் பகுதியில் வேன் டிரைவராக உள்ள பார்த்திபன் (29) என்பவர், அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்.
வேலை முடிந்து தனது கணவர் தான் வந்துள்ளார் என்று, அந்த பெண் கதவை திறந்துள்ளார். அப்போது பார்த்திபன் அதிரடியாக பெண்ணின் வாயை பொத்தி, உள்ளே தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண், பார்த்திபன் கையை கடித்தவிட்டு, வெளியே ஓடிவந்து உதவி கேட்டு அலறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பார்த்திபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி அந்த பெண் கணவருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அவர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, அதே பகுதியில் பதுங்கி இருந்த பார்த்திபனை மடக்கி பிடித்தனர். அப்போது, அவர் தப்பியோட முயன்றதால் அவரது இடது கை உடைந்தது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். பின்னர், அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.