கொடைக்கானல்: கொடைக்கானலில் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்தார். சின்னூர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சின்னூர் கிராமம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது. அப்பகுதியில் சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சின்னூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் குப்பாம்பாறையாறு, கல்லாறு ஆகிய பெரிய ஆறுகள் உள்ளன. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் மலைக்கிராமத்தில் உள்ள மக்கள் கீழே செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் சின்னூர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் மழை குறைந்ததால் நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த கிராமத்தில் உள்ள சில இளைஞர்கள் டோலி கட்டி தூக்கி சுமார் 5 கி.மீ. தூரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் தற்போது டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரியம்மாள் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.