கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 62து மலர் கண்காட்சி விழா மற்றும் கோடை விழா நடத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. பின்னர் மாவட்ட கலெக்டர் சரவணன் கூறியதாவது: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சி, கோடை விழா வரும் 24ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை என 9 நாட்கள் நடைபெறும். மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கான பல்வேறு வண்ண மலர் வகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கோடை விழாவில் பரத நாட்டியம், சிலம்பம், படகுப் போட்டி, நாய் கண்காட்சி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மலர் கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.75, சிறியவர்களுக்கு ரூ.35, கேமராவிற்கு ரூ.50, வீடியோ கேமராவிற்கு ரூ.100 என பூங்கா நிர்வாகம் நிர்ணயம் செய்து உள்ளது.
மலர் கண்காட்சி, கோடை விழா துவக்க நிகழ்ச்சிகளில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி துறை, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை, சுற்றுலாத் துறை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில் புதிய சுற்றுலாத் தலமாக பெப்பர் அருவி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது அங்கு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் அங்கு செல்ல சுற்றுலாப் பயணி ஒருவருக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கூறினார்.