கொடைக்கானல் : கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுமாடுகள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.கொடைக்கானலில் நகர் மற்றும் சுற்றுலா இடங்களில் வனவிலங்குகளின் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டுமாடுகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் கல்லுக்குழி குடியிருப்பு பகுதியில் காட்டுமாடு கூட்டம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குடியிருப்புகள் புகுந்த காட்டுமாடுகள் முட்டியதில் 3 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டுமாடுகளின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட தனிகுழுவினரை வனத்துறையினர் அமைத்து உள்ளனர். எனினும் காட்டுமாடுகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.