திண்டுக்கல்: கொடைக்கானலில் தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக முக்கிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆண்டு முழுவதும் இதமான தட்பவெப்பம் நிலவும் கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள அருவிகள் மற்றும் நீர் தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் உள்ள வெள்ளி அருவி, வட்டகானல் அருவி, அஞ்சறை அருவி, அஞ்சுவீடு அருவி, கரடிசோலை அருவி, தேவதை அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் வெள்ளி கம்பிகளாய் அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளி அருவி போன்ற சில அருவிகளுக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அஞ்சுவேடு அருவி உள்ளிட்ட சில அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி தரப்படாத நிலையே இருப்பதால் தமிழ்நாடு அரசு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.