கொடைக்கானல் : கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால், நகர் பகுதி மட்டுமல்லாமல் மலைக்கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில், கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் வடகவுஞ்சியை அடுத்துள்ள மேல்பள்ளம் எனும் மலைகிராமத்தில் கடந்த 10 நாட்களாக மின்விநியோகம் சரிவர கிடைக்கவில்லை என்றும், சில நாட்களாக முற்றிலுமாக மின்தடை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று மேல்பள்ளத்தில் சீரான மின்விநியோகம் செய்ய கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் மின்வாரிய அலுவலர்கள், வருவாய் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.