*மக்கள், சுற்றுலா பயணிகள் பீதி
கொடைக்கானல் : கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றியுள்ள மலைக்கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் நகர் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்டுமாடுகள் அடிக்கடி உலா வருவது மட்டுமின்றி பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை தாக்கி அச்சுறுத்தி வருகிறது.
மேலும் காட்டுமாடுகள் தாக்கி சிலர் பலியான நிலையில் பலர் படுகாயமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய குறிஞ்சி ஆண்டவர் கோயில் பகுதியில் நேற்று 20க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் ஒரே நேரத்தில் படையெடுத்தன. அப்போது அங்கேயுள்ள பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் கடைக்காரர்கள் அச்சமடைந்து பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்தனர். பின்னர் காட்டுமாடுகள் அங்கிருந்து சென்ற பின்பே அனைவரும் நிம்மதியடைந்தனர்.
இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறியதாவது: கொடைக்கானல் நகரில் உள்ள பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் மலைக்கிராமங்களில் காட்டுமாடுகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.மேலும் காட்டுமாடுகள் ெபாதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் கால்நடைகளை தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே வனத்துறையினர் காட்டுமாடுகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.