*2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் : கொடைக்கானலில் உள்ள ஏரிச்சாலை பகுதியில் நேற்று வீசிய சூறைக்காற்றால் மரம் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் சாரல் மழையுடன் சூறைக்காற்று வீசுகிறது. சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் முக்கியமான பகுதிகளில் ஒன்றான கொடைக்கானல் ஏரி சாலையில், நேற்று நண்பகல் சுற்றுலா வளர்ச்சிக்கழக படகு இல்லம் அருகில் இருந்த மரம் ஒன்று பலத்த சூறைக்காற்றின் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையின் குறுக்கே சரிந்து விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணிகளை தொடங்கினர். இந்த பணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் மரம் முழுமையாக அகற்றப்பட்டதை தொடர்ந்து சாலை போக்குவரத்து சீரானது.