*கர்நாடகா தம்பதி, குழந்தை தப்பினர்
கொடைக்கானல் : கொடைக்கானலில் கார் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கர்நாடகா தம்பதி, குழந்தை உயிர் தப்பினர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று மலர் கண்காட்சி துவங்கியது. இதனை காண சுற்றுலாப்பயணிகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வர துவங்கியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா வந்தவர்கள் மீண்டும் நேற்று ஊருக்கு புறப்பட்டனர்.
கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைச்சாலையில் பண்ணைக்காடு பிரிவு அருகே மூலையாறு பகுதியில் வந்தபோது, கொடைக்கானல் நோக்கி வந்து கொண்டு இருந்த சரக்கு லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளானது.இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக காரில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தம்பதி, குழந்தை எவ்வித காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தாண்டிக்குடி போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.