Wednesday, July 9, 2025
Home செய்திகள் மகத்துவம் மிகுந்த கொடைக்கானல் மலைப்பூண்டு!

மகத்துவம் மிகுந்த கொடைக்கானல் மலைப்பூண்டு!

by Porselvi

உடலுக்கும், மனதுக்கும் இதமான சூழலைத் தரும் குளிர்ச்சியான கிளைமேட், பார்க்கும் இடமெல்லாம் கொட்டிக்கிடக்கும் பசுமை, குகையில் இருந்து வெளியேறும் பனிச்சாரல் என பல சிறப்பம்சங்கள் கொண்ட கொடைக்கானலை மலைகளின் இளவரசி என சொல்வதில் மிகை ஏதும் இருக்க முடியாது. இத்தகைய அழகிய பிரதேசத்தில் விளையும் சில பொருட்கள் இந்தியா முழுக்க புகழ்மிக்கதாக விளங்குகின்றன. அவற்றில் ஒன்றுதான் கொடைக்கானல் மலைப்பூண்டு. பல்லுகள் பெரிதாகவும், மருத்துவக் குணங்கள் மிகுந்தும் காணப்படும் இந்தப்பூண்டுகள் கொடைக்கானலில் பெரிய அளவில் விளைவிக்கப்படுகின்றன. கொடைக்கானல் பூண்டு சாகுபடியில் ஈடுபடும் ஒருவரைத் தேடியபோது செல்வேந்திரன் என்ற விவசாயியைச் சந்தித்தோம். “திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள கூக்கால்தான் எனக்கு சொந்த ஊரு. பத்தாவது வரை படித்த நான் அப்பாவிடம் இருந்து விவசாயத்தைக் கற்றுக்கொண்டு முழுவதுமாக விவசாயத்தில் இறங்கிவிட்டேன். இந்தப் பகுதியில் கேரட், உருளைக்கிழங்கு, பூண்டு உள்ளிட்ட பயிர்கள் அனைத்துக் காலங்களிலும் சாகுபடி செய்யப்படும். இதில் கொடைக்கானல் பூண்டு ரொம்பவே விசேஷம். இதற்கென்று ஒரு பெரிய சந்தையே இருக்கிறது. கொடைக்கானல் பூண்டின் சிறப்பம்சத்திற்கு இங்குள்ள சீதோஷ்ண நிலைதான் காரணம். இந்த சீதோஷ்ண நிலையைப் பயன்படுத்தி சிங்கப்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரக பூண்டுகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கொடைக்கானல் நகரத்தினைத் தவிர மலைகளைச் சுற்றி இருக்கும் புதுப்புத்தூர், குண்டுப்பட்டி, பழம்புத்தூர் பகுதிகளில் மலைப்பூண்டு விவசாயம் பெரிய அளவில் நடக்கிறது’’ என பேச ஆரம்பித்த செல்வேந்திரன் பூண்டை சாகுபடி செய்யும் விதம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

“ பூண்டு விதை ஊன்றுவதற்கு முன்பு இரண்டு முறை நிலத்தை உழவு ஓட்டுவோம். விதைப்புக்கான விதைகளை மலைப்பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் இருந்து வாங்குவோம். ஏற்கனவே நாங்கள் சாகுபடி செய்ததில் இருந்து தரமான பூண்டுகளை விதைக்காக இருப்பு வைத்தும் பயன்படுத்துவோம். இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலும் விதைப் பூண்டுகளை முழுவதுமாக விற்பனை செய்வது கிடையாது. தங்கள் தேவைக்குப் போக மீதி இருப்பதை மட்டுமே விற்பனை செய்கிறார்கள். ஒரு ஏக்கரில் விதைப்பதற்கு எனக்கு 500 கிலோ பூண்டு விதைகள் தேவைப்பட்டது. விதைகளை நிலத்தில் அப்படியே அதிக அழுத்தம் தராமல் ஊன்றிவிடுவேன். ஒரு விதைக்கும் மற்றொரு விதைக்கும் இடையே 5 அங்குல இடைவெளி விடுவேன். விதை ஊன்றியவுடன் உயிர்த்தண்ணீர் கொடுப்போம். 15 நாள் கழித்து களை எடுத்துவிடுவோம். களை எடுக்காவிட்டால் பூண்டுச் செடிகளை களைச்செடிகள் மூடிவிடும். இதனால் திடமான பூண்டு கிடைக்காமல் போய்விடும். பனியின் காரணமாக மஞ்சள் பழுப்பு நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கும். இதற்கென்று பெரிதாக மருந்து கிடையாது. வெயிலும், குளிர்ந்த காற்றும் சரியான அளவு வீசினாலே போதும். தண்ணீரைப் பொருத்தவரையில் எட்டு நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்சினால் போதும். ஏரியில் இருந்தும், மலையில் இருந்தும் வரும் வாய்க்கால் வழியாக தண்ணீர் பாய்ச்சுவோம். தேவையான சமயத்தில் மாட்டு எருவை மட்டும் இடுவோம். வேறு பராமரிப்பு வேலைகள் அதிகம் இருக்காது. உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவது, களையெடுப்பது போன்ற வேலைகளை செய்தால் மட்டுமே போதும். விதை ஊன்றியதில் இருந்து 120வது நாளில் அறுவடை செய்துவிடலாம். மேட்டுப்பாளையம் ரக பூண்டுகளை 90 லிருந்து 95வது நாளில் அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கரில் எனக்கு 3500 கிலோ பூண்டு மகசூலாக கிடைத்தது. இதில் பெரிய பல்லுகள் கொண்ட முதல்தரமான பூண்டு 1900 கிலோ அளவுக்கு இருந்தது. இரண்டாம் தரமான பூண்டு 1000 கிலோவும், மூன்றாம் நிலை பூண்டில் 600 கிலோவும் கிடைத்தது. தரத்தைப் பொருத்து மலைப்பூண்டை விற்பனை செய்கிறோம். சிங்கப்பூர் ரக மலைப்பூண்டுக்கு நம்ம ஊரில் நல்ல கிராக்கி. இதில் முதல் தர பூண்டை ரூ.200 லிருந்து ரூ.250க்கு விற்பனை செய்வோம். இரண்டாம் நிலை பூண்டுகள் ரூ.100 லிருந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்படும். மூன்றாம் நிலை பூண்டுக்கு ரூ.50 லிருந்து ரூ.90 வரை விலை கிடைக்கும். கடந்த சீசனில் எனக்கு ஒரு ஏக்கர் மகசூலில் இருந்து ரூ.4.70 லட்சம் வருமானமாக கிடைத்தது. இதில் ரூ.1 லட்சம் செலவு போக ரூ.3.70 லட்சம் லாபமாக கிடைத்தது. அடுத்த போகத்திற்கு 500 கிலோ விதைப்பூண்டுகளை எடுத்து வைத்திருக்கிறேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேட்டுப்பாளையம் ரக பூண்டுகளை விதைத்து பராமரித்து வருகிறேன். இன்னும் 2 மாதத்தில் இதை அறுவடை செய்து வருமானம் பார்ப்பேன்’’ என தீர்க்கமாக பேசுகிறார்.

தொடர்புக்கு: செல்வேந்திரன்: 82700 29276, 93446 00292

சிங்கப்பூர் பூண்டை வீட்டின் உள்ளே ஒரு சாக்கில் கட்டி வைத்து, அதன் கீழ் நெருப்பு மூட்டி லேசாக காய வைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நல்ல பதத்திற்கு வந்து இருப்பு வைக்க தோதாக இருக்கும்.

மேட்டுப்பாளையம் பூண்டு வெண்ணிறம் கொண்டது. சிங்கப்பூர் பூண்டு சற்று சாம்பல் நிறம். சிங்கப்பூர் பூண்டை நேரடியாக வெயிலில் காயவைத்து விற்பனை செய்ய முடியாது. வீட்டில் இருக்கும் டெம்பரச்சேரை வைத்து மட்டுமே காய வைக்கப்படுகிறது. சிங்கப்பூர் பூண்டை சாகுபடி செய்வது கொஞ்சம் சிரமம். மெனக்கெடல் அதிகம் இருக்கும். ஆனால் நல்ல வருமானம் கிடைக்கும்.

மேட்டுப்பாளையம் பூண்டுகளின் பல்லுகள் ஒன்று, இரண்டு மட்டுமே பெரியதாக இருக்கும். ஆனால் சிங்கப்பூர் பூண்டுகளின் பல்லுகளில் பெரும்பாலானவை பெரியதாக இருக்கும். மேட்டுப்பாளையம் பூண்டை இரண்டிலிருந்து மூன்று மாதம் வரை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். சிங்கப்பூர் பூண்டை எட்டு மாதம் வரை கூட இருப்பு வைக்கலாம்.

செடி முருங்கைக்கான சீசன்!

வைகாசி பட்டத்தில் நன்கு செழித்து வளரும் பயிர்களின் பட்டியலில் செடி முருங்கைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்தச் செடி முருங்கையானது நடவு செய்த 4 அல்லது 5 மாதங்களில் காய்க்கத் தொடங்கி விடும். இதனால் விவசாயிகள் அதிக காலம் காத்திருக்காமல் விரைவாக வருமானம் பார்க்கலாம். அதேபோல் ஒருமுறை விதைத்தால் மூன்று ஆண்டுகள் வரை காய் பறித்து விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் இந்தச் செடிமுருங்கையை முறையாக சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம். செடி முருங்கையைப் பொதுவாக ரகத்தின் தன்மைக்குத் தகுந்தபடி இடைவெளி மற்றும் செடியின் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். 8 முதல் 12 மணி நேரம் உயர் பாத்திகளை சொட்டுநீர்ப் பாசனத்தை பயன்படுத்தி ஈரப்படுத்தி நடவு செய்ய வேண்டும். பயிரிடும் விதை தரமானதாக இருந்தால் அதிக மகசூல் கிடைக்கும். விதையின் தரத்தைப் பரிசோதிக்க அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு விதைப் பரிசோதனை நிலையங்களில் விதைகளைக் கொடுத்து அதன் தரத்தை அறிந்த பின் விதைப்பது நல்லது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi