திண்டுக்கல்: யானை நடமாட்டத்தால் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலா தலமாக கொடைக்கானல் திகழ்கிறது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கை அழகை கண்டு கழித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் யானை கூட்டம் முகாமிட்டு இருந்ததன் காரணமாக தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் செல்ல 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று அந்த தடை நீக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் யானை கூட்டம் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல தற்காலிமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் இருப்பதால் பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதியே சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருக்கும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.