திருவனந்தபுரம்: கொச்சி அருகே கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் கரை ஒதுங்க தொடங்கி உள்ளன. கொச்சி துறைமுகம் அருகே 2 நாட்களுக்கு முன் கடலில் சரக்கு கப்பல் முழுமையாக மூழ்கியது. விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து 640 கண்டெய்னருடன் கொச்சிக்கு புறப்பட்டுச் சென்ற லைபீரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் மூழ்கியது. கப்பலில் இருந்து 640 கண்டெய்னர்கள் கடலில் மூழ்கிய நிலையில், 24 ஊழியர்கள் மீட்பு கொச்சியில் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் 367 டன் எரி எண்ணெய், 84 டன் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. கந்தக ஆயில் உள்ள பல சரக்கு கண்டெய்னர்கள் கடலில் விழுந்ததால் ரசாயனம் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படையை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கப்பலில் பணியாற்றிய 21 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 3 பேர் சரக்கு கப்பலில் தொடர்ந்து தங்கியிருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதா கப்பலை சேர்ந்த வீரர்கள் நேற்று மீதமிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
சரக்கு கப்பலில் அபாயகரமான ரசாயனங்கள் இருப்பதால் சுமார் 20 கடல் மைல் தொலைவுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரசாயனங்கள், டீசல், பர்னஸ் ஆயில் ஆகியவை கேரள கடல் பகுதியில் கலந்து வருகின்றன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கேரள அரசு அதிகாரிகள் கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த 24 பேர் லைபீரிய சரக்கு கப்பலில் பணியாற்றினர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். என்ன காரணத்துக்காக சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக கப்பலின் மாலுமிகள், பொறியாளர்களிடம் விசாரித்து வருகிறோம்.
கேரள தலைமைச் செயலாளர் ஜெயதிலக் தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கேரள கடல் பகுதியில் கலந்திருக்கும் அபாயகரமான ரசாயனங்கள், எண்ணெயை அகற்றுவது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கடலோர காவல் படையை சேர்ந்த சாக்சம் என்ற கப்பல், எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கடற்படையின் கண்காணிப்பு விமானம் மூலம் கடலில் தடுப்பு ரசாயனம் தெளிக்கப்படுகிறது. எர்ணாகுளம், ஆலப்புழா கடல் பகுதிகள், கடற்கரைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என கேரள அரசு தெரிவித்து இருந்தது.